கோவில்பட்டி அருகே பயங்கரம் பிளம்பர் வெட்டிக் கொலை கொலையாளிகளுக்கு வலைவீச்சு

கோவில்பட்டி அருகே பிளம்பர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-30 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே பிளம்பர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிளம்பர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த அத்தைகொண்டான் ஜெகஜோதி நகரைச் சேர்ந்தவர் சாலமோன். இவருடைய மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 28). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி இந்திராணி (20). இவர்களுக்கு குழந்தை இல்லை. ஸ்டீபன்ராஜ் நேற்று முன்தினம் காலையில் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் முடி வெட்டி விட்டு வருவதாக கூறிச் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

வெட்டுக்காயங்களுடன் பிணமாக...

நேற்று காலையிலும் இந்திராணி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் முறையிட்டார்.

இந்த நிலையில் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூரில் ஒரு மாந்தோப்பில் உள்ள கோழிப்பண்ணை அருகே ஸ்டீபன்ராஜின் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அறிந்த போலீசார் அந்த தோப்பிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு காயங்களுடன் ஸ்டீபன் ராஜ் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

ஸ்டீபன் ராஜை மாந்தோப்புக்கு வரவழைத்து கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.கோவில்பட்டி அருகே பிளம்பர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்