ராதாபுரம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

ராதாபுரம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-30 22:00 GMT
ராதாபுரம், 

ராதாபுரம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 56). இவர் சென்னை அருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஈசுவரி. இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

சதீஷ்குமார், மணிமுத்தாறு பட்டாலியனில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள், பிளஸ்-2 படித்து வருகிறார்.

குடும்ப தகராறு

சண்முகவேல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி சண்முகவேல் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி செல்லாமல் மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

தற்கொலை

இந்த நிலையில் ராதாபுரம் அருகே பட்டார்குளம் விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற கோழிப்பண்ணையில் நேற்று காலையில் சண்முகவேல் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். அவர் இறந்து சில நாட்கள் ஆனதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக சண்முகவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சண்முகவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்