பால் கொள்முதல் செய்ய வத்தல்மலையில் கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும்

பால் கொள்முதல் செய்ய வத்தல்மலையில் கூட்டுறவு சங்கத்தை தொடங்க வேண்டும் என்று மலை வாழ்மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-05-30 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில் வத்தல்மலை அமைந்துள்ளது. இந்த மலைமேல் உள்ள கிராமங்கள் கடல்மட்டத்தில் இருந்து 1,100 மீட்டர் உயரத்தில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலமாக விளங்கும் ஏற்காடு மலையின் தொடர்ச்சியாக உள்ள இந்த மலையில் எந்த பகுதிக்கு சென்றாலும் குளிர்ச்சியான சீதோ‌‌ஷ்ணநிலை நிலவுவது வழக்கம். வத்தல்மலையில் உள்ள 3 ஊராட்சிகளில் சிக்கம்பட்டி, பால்சிலம்பு, ஒன்றிக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 2,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பிலும் இந்த பகுதி மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த மலை கிராம மக்களின் மேம்பாட்டிற்காக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 300 மாடுகள் இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த கறவை மாடுகளை வளர்த்த போதும் இந்த மலைகிராமத்தில் பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்கங்கள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பஸ் வசதி இல்லாத இந்த மலைகிராமங்களை சேர்ந்த மக்கள் கார்கள், ஜீப்புகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமாகவே பாலை அடிவாரத்தையொட்டி உள்ள நகர பகுதிகளில் இருக்கும் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த வாகனங்களில் கொண்டு செல்ல ஒரு லிட்டர் பாலுக்கு 10 ரூபாய் பயண கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் இவர்களுக்கு பால் உற்பத்தியில் உரிய லாபம் கிடைக்கவில்லை. சாதாரணமாக ஒரு கறவை மாடு 8 லிட்டர் பால் கறந்தால் அதை நகர பகுதிகளுக்கு கொண்டு செல்ல 80 ரூபாய் பயண செலவு ஏற்படுகிறது. இதனால் வத்தல்மலையில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளை விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வத்தல்மலை கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலை அங்கேயே கொள்முதல் செய்ய பால் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்