நாமக்கல் நகராட்சியில் தொழில்வரி ரசீதுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது
நாமக்கல் நகராட்சியில் தொழில்வரி ரசீது வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல்-துறையூர் சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் இலக்கிய செல்வன் (வயது 32). இவர் தொழில் அபிவிருத்திக்காக கடன் உதவி கேட்டு தனியார் வங்கி ஒன்றில் விண்ணப்பம் செய்தார். அப்போது வங்கியினர் தொழில்வரி ரசீது கேட்டனர்.
இதையடுத்து தொழில்வரி ரசீது வழங்கக்கோரி இலக்கிய செல்வன், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து நகராட்சி வருவாய் உதவியாளர் வரதராஜூ (50), அவரது ஸ்டூடியோவுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தொழில்வரி ரசீது வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் இலக்கிய செல்வன் ரூ.2 ஆயிரம் மட்டுமே தருவதாக கூறினார்.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத இலக்கிய செல்வன் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று நகராட்சி அலுவலகம் வந்த இலக்கிய செல்வன், உதவியாளர் வரதராஜூவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையிலான போலீசார் வரதராஜூவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.