மத்திய அரசு அலுவலகங்களில் படம் வைக்கக்கோரி பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்

மத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்கக்கோரி அவருடைய புகைப்படத்துடன் இந்து மக்கள் கட்சியினர் வந்தனர். அவர்கள் அந்த புகைப்படத்தை தஞ்சை ரெயில் நிலைய மேலாளரிடம் வழங்கினர்.;

Update: 2019-05-30 22:45 GMT
தஞ்சாவூர்,

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே தலைமையில் மாவட்ட செயலாளர் சரவணசெல்வம், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் குமார், நகர செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வந்தனர்.

பின்னர் அவர்கள் மோடியின் புகைப்படத்தை தஞ்சை ரெயில்நிலைய மேலாளர் ராஜசேகரனிடம் வழங்கினர். பின்னர் அவரிடம் ஒரு மனுவும் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசின் அங்கமாக இயங்கி வரக்கூடிய தமிழக ரெயில் நிலையங்களில் உள்ள முக்கிய அதிகாரிகள் அலுவலகங்களிலும், துறை சார்ந்த அலுவலக பிரிவுகளில் தேசிய தலைவர்கள், பிரதமர் புகைப்படம் வைக்கப்படுவதும், கட்சி சார்பற்று பல்வேறு தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு இருப்பதை அறிவீர்கள்.


அது போன்று தங்கள் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மற்ற தலைவர்களின் படங்களோடு பிரதமர் படமும் அமையப்பெறுவது பொருத்தமானதாகவும், கட்சி பாகுபாடுகள் அற்ற சம நோக்கு உள்ளதாகவும் அமையும் என்பதால் விரைந்து செயல்பட்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே கூறுகையில், ‘‘முதல் கட்டமாக ரெயில் நிலையத்தில் வைக்க பிரதமர் மோடியின் படத்தை வழங்கி உள்ளோம். அடுத்ததாக அனைத்து மத்திய அரசு அலுவலங்களுக்கும் வழங்க உள்ளோம்’’என்றார்.

மேலும் செய்திகள்