குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் காலனி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு, தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் திடீரென பழுதானது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை அங்குள்ள வெள்ளையூர்-ஏமம் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பழுதடைந்த மின் மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.