ராமநத்தம் அருகே, ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதல் - வாலிபர் பலி
ராமநத்தம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.;
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் திருமுருகன் (வயது 29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருமுருகன், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டியில் இருந்து கல்லூருக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
கல்லூர் அருகே சென்ற போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று திருமுருகன் ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட திருமுருகன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, திருமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.