பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 11 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 11 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 14 சக்கரங்கள் கொண்ட லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மாண்டியாவை சேர்ந்த முஜீப் (வயது 40) என்பவர் ஓட்டினார். உடன் லாரி உரிமையாளர் ரவிக்குமார் (42) இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே பர்கூர் மலைப்பாதை முதலாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது நிலைதடுமாறிய லாரி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் முஜீப் காயம் அடைந்தார். ரவிக்குமார் காயமின்றி தப்பினார்.
விபத்தில் லாரியில் இருந்த சர்க்கரை மூட்டைகள் ரோட்டில் சிதறின. இதனால் அந்த வழியாக ஈரோட்டில் இருந்து மைசூருக்கும், அங்கிருந்து ஈரோட்டுக்கும் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு வேறு லாரி வரவழைக்கப்பட்டு, சிதறி கிடந்த சர்க்கரை மூட்டைகளை அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடந்தது. நேற்று பகல் 11 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது.
பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் சுமார் 11 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.