சத்தி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்; மரம்-மின்கம்பங்கள் சாய்ந்தன

சத்தியமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் ஓடுகள் காற்றில் தூக்கிவீசப்பட்டன.;

Update: 2019-05-29 23:15 GMT
ஈரோடு, 

சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இரவு 7 மணி வரை வெப்பத்தின் தாக்கத்தை உணரமுடிந்தது. இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு திடீரென சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் சூறாவளிக்காற்று நீடித்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விளம்பர பலகைகள் பறந்தன. மேலும் ரோடு, தெருக்களில் புழுதி பறந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.

மேலும் கோவை ரோட்டில் எஸ்.ஆர்.டி கார்னர் அருகே ஒரு வேப்ப மரமும், மேட்டுப்பாளையம் ரோட்டில் காந்திநகர் பஸ் நிறுத்தம் அருகே இருந்த வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. இந்த மரங்களை உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கிடையே இரவு 8.45 மணி அளவில் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் கடையை மூடிவிட்டு சென்றார்கள்.

தம்மையன்புதூரில் முகுந்தன் என்பவரது வீடு மீது வேப்பமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் வீடு சேதம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி பள்ளி அருகே பூட்டிக்கிடந்த வீட்டின் மீது மின்கம்பம் சாய்ந்தது.

சத்தி அரசு போக்குவரத்து பணிமனை அருகே சோமசுந்தரம் என்ற விவசாயி தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை சாகுபடி செய்திருந்தார். இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்துவிட்டன. இதேபோல் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

இதேபோல் கோபியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. கோபி, காசிபாளையம், சிங்கிரிபாளையம், கணபதிபாளையம், கூகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோபி பகுதியில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மரங்களை அகற்றினார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மின்தடை ஏற்பட்டது.

கோபி கூகலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் காய வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்தது. மேலும் 500 நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமானது. இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. புஞ்சைபுளியம்பட்டி, காவிலிபாளையம், நல்லூர், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று அதிகாலை 4.30 மணி வரை விடிய விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது.

இந்த சூறாவளிக்காற்றால் கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள சின்னபொன்னான் என்பவரது தோட்டத்தில் 150 வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. ஒரு வீட்டின் ஓடுகளும் காற்றில் பறந்தன. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பருவாச்சி, ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இடி-மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது. இந்த சூறாவளிக்காற்றால் அந்தியூர்-பவானி ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனே அங்கு சென்று மரங்களை அப்புறப்படுத்தினார்கள். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில் பூதப்பாடியில் ஒரு ராட்சத வேப்ப மரமும், அண்ணா நகரில் புளிய மரமும், சாய்ந்ததால் அம்மாபேட்டை-அந்தியூர் மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் இரவு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டது

பூதப்பாடி அடுத்துள்ள எஸ்.பி.கவுண்டணூரில் பழமையான புளியமரம் அங்குள்ள ஆரோக்கியசாமி (75) என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதனால் சுவர் இடிந்து வீட்டுக்குள் இழுந்தது. இதில் ஆரோக்கியசாமி மனைவி பாக்யாமேரி (70) காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நம்பியூர், வேமாண்டம்பாளையம், குருமந்தூர், ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 15 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பதிவாகியுள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டேரிபள்ளம் -37, கொடிவேரி -27, பவானிசாகர் -26.2, நம்பியூர் -20, பெருந்துறை -18, மொடக்குறிச்சி -16, வரட்டுப்பள்ளம் -14.2, கோபி -12, பவானி 10.4, சத்தியமங்கலம் -10, தாளவாடி -5, கொடுமுடி -4.2, ஈரோடு -4, சென்னிமலை -2.

மேலும் செய்திகள்