ஆலங்குளம் அருகே பரிதாபம் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2019-05-29 22:30 GMT
ஆலங்குளம், 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரை அடுத்த உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயி. இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சுதன்குமார் (வயது 6), தனுஷ்குமார் (4) ஆகிய 2 மகன்கள். சுதன்குமார், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். தனுஷ்குமார் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான்.

இவர்களது வீட்டின் அருகில் ஊர் பொது கிணறு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் தனுஷ்குமார் தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள ஊர் பொது கிணற்றில் தனுஷ்குமார் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

நீண்ட நேரமாக தனுஷ்குமார் மாயமானதால், அவனை மாடசாமி மற்றும் குடும்பத்தினர் தேடினர். அப்போது கிணற்றில் தனுஷ்குமார் பிணமாக மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் தவறி விழுந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்