சின்னமனூர் அருகே, விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சின்னமனூர் அருகே விவசாயியை குத்திக் கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-29 22:30 GMT
சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்பாண்டி (வயது 41). விவசாயி. இவருக்கு திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இவர் அதே ஊரில் உள்ள கல்யாண மண்டப தெருவை சேர்ந்த குருசாமி மகள் அம்சவள்ளியுடன் நெருங்கி பழகி வந்தார். அம்சவள்ளி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்தநிலையில் ரத்தினவேல்பாண்டி, திருமணம் செய்து கொள்வதாக கூறி அம்சவள்ளியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அம்சவள்ளி கர்ப்பமானார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள ரத்தினவேல்பாண்டி மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அம்சவள்ளி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகள் சாவுக்கு காரணமான ரத்தினவேல்பாண்டியை கொலை செய்ய குருசாமி திட்டமிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, சீலையம்பட்டியில் இருந்து வேப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் ரத்தினவேல்பாண்டி சென்று கொண்டிருந்தார். இதையறிந்த குருசாமி, அவருடைய மகன் வீமராஜா ஆகியோர் சேர்ந்து ரத்தினவேல் பாண்டியை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொலை செய்தனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர். மேலும் வீமராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் சின்னமனூர் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த வீமராஜாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்