போடியில், கடையின் ஜன்னலை உடைத்து பணம் திருட்டு

போடியில் கடையின் ஜன்னலை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

Update: 2019-05-29 22:30 GMT
போடி, 

போடி டி.வி.கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தாகூர்சிங் (வயது 59). இவர், சுந்தரபாண்டியன் தெருவில் மெத்தை தயாரிக்கும் இலவம் பஞ்சு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வேளையில் கடையின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் கடையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலை கடையை திறக்க வந்த தாகூர்சிங், கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாகூர்சிங் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்