கூட்டணி தலைவர்களின் முடிவுக்காக காத்திருப்பேன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இல்லை எடியூரப்பா பரபரப்பு பேட்டி
கூட்டணி தலைவர்களின் முடிவுக்காக காத்திருப்பேன் என்றும், சட்டசபை தேர்தலை மீண்டும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கூட்டணி தலைவர்களின் முடிவுக்காக காத்திருப்பேன் என்றும், சட்டசபை தேர்தலை மீண்டும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இல்லை என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா டெல்லி பயணம்
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. மத்தியிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நேற்று பெங்களூருவில் இருந்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
பதவி ஏற்பு விழாவுக்காக செல்லும் எடியூரப்பா, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து கர்நாடக அரசியல் மற்றும் ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டெல்லிக்கு செல்லும் முன் பெங்களூருவில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது;-
மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்
மத்தியில் பா.ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி நாளை (அதாவது இன்று) பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லிக்கு செல்கிறேன். மாநிலத்தில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கூட்டணி அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.
ஊழல், அதிகாரிகள் இடமாற்றத்தில் மட்டுமே கூட்டணி அரசு கவனம் செலுத்துகிறது. வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை. மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதையே குறியாக வைத்துள்ளனர். அதனால் தான் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்.
தேர்தலை சந்திக்க...
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியால் கூட்டணி தலைவர்கள் மோதிக் கொள்வார்கள். கூட்டணி தலைவர்களால், இந்த அரசு கவிழும் நிலை உருவாகும். அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜனதா ஆட்சியை அமைக்கும்.
கூட்டணி தலைவர்களின் முடிவுக்காக காத்திருப்பேன். எக்காரணத்தை கொண்டும் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக இல்லை. டெல்லி சென்று வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.