சிங்கம்புணரியில் இளவட்டம் மஞ்சு விரட்டு

சிங்கம்புணரியில் வைகாசி மாத இளவட்டம் மஞ்சு விரட்டு கிராமத்தார்கள் சார்பில் நடைபெற்றது.

Update: 2019-05-29 22:00 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் இளவட்டம் மஞ்சு விரட்டு நடைபெறுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டுக்கான மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. முன்னதாக கிராமத்தார்கள் சார்பில் சந்திவீரன் கூடத்தில் இருந்து ஜவுளிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் நாடக மேடை முன்பு நிறுத்தப்பட்ட கோவில் காளைக்கு கிராமத்தார் சார்பில் முதல் மரியாதை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோவில் காளை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்பு மைதானத்தின் மையப்பகுதியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் மைதான களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் சில காளைகளை மடக்கி பிடித்தனர். அதிகப்படியான காளைகள் வீரர்களின் கைகளில் பிடிபடாமல் பாய்ந்து சென்றன. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அண்டா, பேன், செல்போன், மிக்சி, கிரைண்டர், கட்டில், கடிகாரம் போன்ற பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் மஞ்சுவிரட்டை காணவும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், பொன்னமரவதி, துவரங்குறிச்சி, நத்தம் மற்றும் மேலூர் போன்ற இடங்களில் காளைகள் கொண்டு வரப்பட்டு அவித்து விடப்பட்டன. மஞ்சு விரட்டில் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி இளைஞர்கள், கிராமத்தினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்