சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை - மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-28 22:44 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஓமலூர் அருகே உள்ள திமிரிக்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ஓமலூர்-மேட்டூர் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த வாகை மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல மேட்டூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையினால் மேட்டூரில் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

தம்மம்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றினால் கோனேரிப்பட்டி பகுதியில் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையின் குறுக்கே புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையினால் தம்மம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் அத்திக்கட்டியில் சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. இதே போல எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. ஏற்காட்டில் நேற்று மாலை 5.30 மணிக்கு இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக இருளில் பொதுமக்கள் தவித்தனர். மேலும் ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்