கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது எடியூரப்பா பேச்சு
கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று எடியூரப்பா கூறினார்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று எடியூரப்பா கூறினார்.
கூட்டணி அரசு நீடிக்காது
ஷோபா 2-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவருக்கு பாராட்டு விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
சுமலதா வெற்றி
இந்த அரசு எத்தனை நாட்கள் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. கர்நாடக சட்டசபையில் நான் பேசும்போது, மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஒரு கருத்தை கூறினேன்.
அப்பா-மகன்கள் ஜனதா தளம் (எஸ்) சேர்ந்து காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவார்கள் என்று நான் கூறினேன். அது தற்போது உண்மையாகிவிட்டது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடா, வீரப்பமொய்லி, கே.எச்.முனியப்பா ஆகியோர் தோல்வி அடைவார்கள், மண்டியாவில் சுமலதா வெற்றி பெறுவார் என்று கூறினேன்.
வாக்காளர்களுக்கு நன்றி
அப்போது என் பேச்சை யாரும் நம்பவில்லை. ஆனால் நான் என்ன கூறினேனோ அது தற்போது நடந்துவிட்டது.
கடும் உழைப்பின் காரணமாக பா.ஜனதா இன்று 25 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நிர்மலா சீதாராமன் ராணுவத்துறை மந்திரியாக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்தார். தற்போது நாடாளுமன்றத்துக்கு 78 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.