கூட்டணி ஆட்சியை காப்பாற்ற தீவிரம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை

கூட்டணி ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.;

Update: 2019-05-28 22:30 GMT
பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி புதிய நிபந்தனை விதித்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.

வெற்றி பெறவில்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசில் குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார்.

பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக உள்ளார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அந்த முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதியிலும், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும், ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

ஆபரேஷன் தாமரை

இந்த தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும், பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமையும் என்றும் எடியூரப்பா கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வகையில் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் இறங்க கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மத்தியில் புதிய அரசு அமைந்து ஒரு மாதத்திற்கு பின்பு இதற்கான பணியில் ஈடுபடும்படி கூறி அக்கட்சியின் மேலிடம் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.

ராகுல் காந்தி உத்தரவு

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்பட சுமார் 12 எம்.எல்.ஏ.க்கள் வரை பா.ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மிக தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கூட்டணி அரசை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்று குமாரசாமி மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர். இதனால் முதல்-மந்திரி மீது அவர்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சரிசெய்யும் பணியில் குமாரசாமி ஈடுபட்டுள்ளார்.

10 மந்திரிகள் ராஜினாமா

முதல்கட்டமாக மந்திரிசபையில் காலியாக உள்ள 3 இடங்களை நிரப்பும் வகையில் காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் உள்பட 3 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். மேலும் இன்னொரு சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேசுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மாதத்திற்கு பிறகு மந்திரிசபையை மாற்றவும் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதில் தற்போது உள்ள 8 முதல் 10 மந்திரிகள் ராஜினாமா செய்ய உள்ளனர். அவர்களுக்கு பதிலாக போர்க்கொடி தூக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய நிபந்தனை

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ள ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவியுடன் முக்கிய இலாகாக்களில் ஒன்றான மின்துறையையும் ஒதுக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

ஆனால் தனக்கு நீர்ப்பாசனம் அல்லது போலீஸ் இலாகா ஆகியவற்றில் ஒன்றை வழங்க வேண்டும் என்று ரமேஷ் ஜார்கிகோளி கூறியிருப்பதாக சொல்லப் படுகிறது. எக்காரணம் கொண்டும், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. வுக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்றும் அவர் புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

குமாரசாமி நியமித்தார்

தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது அதிகாரத்தை முடக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசுப்பிரமணியத்தை குமாரசாமி நியமித்தார்.

இதனால் எஸ்.டி.சோமசேகர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வாரிய தலைவராக இருந்தாலும், தனது பேச்சை அதிகாரிகள் மதிப்பது இல்லை என்று அவர் பகிரங்கமாகவே குறை கூறினார்.

முழு அதிகாரம்

இந்த நிலையில் அவருடன் குமாரசாமி தொலைபேசியில் பேசி, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் உங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கிறேன், அரசுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் எஸ்.டி.சோமசேகர், தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசை சேர்ந்த அஜய்சிங் எம்.எல்.ஏ., தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மந்திரி பதவி வேண்டும்

முதல்-மந்திரி குமாரசாமியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகந்தேஷ் கவுஜலகி எம்.எல்.ஏ., பெங்களூருவில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மகந்தேஷ் கவுஜலகி, ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து குமாரசாமியை சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ், சந்தித்து பேசினார். அப்போது அவர், தனக்கு வாரிய தலைவர் பதவி வேண்டாம், மந்திரி பதவி தான் வேண்டும் என்று கேட்டார். இதுபற்றி பரிசீலிப்பதாக குமாரசாமி உறுதியளித்தார்.

எனது ஆதரவு உண்டு

குமாரசாமியை சந்தித்து பேசிய பிறகு நாகேஷ் நிருபர்களிடம் கூறுகையில், “குமாரசாமியை சந்தித்து பேசினேன். எனக்கு வாரிய தலைவர் பதவி வேண்டாம், மந்திரி பதவி தான் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு எனது ஆதரவு உண்டு” என்றார்.

வெளிநாடு சென்று பெங்களூரு திரும்பிய நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், குமாரசாமியை பெங்களூருவில் நேற்று சந்தித்தார். அப்போது அவர்கள், கூட்டணி ஆட்சிக்கு எழுந்துள்ள சிக்கல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்