திருவண்ணாமலையில் பரபரப்பு, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி சிக்கினர் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2019-05-28 22:30 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில் சென்னையில் இருந்த வந்த மருத்துவப் பணிகள் குழுவினர் பல்வேறு ஸ்கேன் மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்தனர். இதில் சில ஸ்கேன் மையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கருக்கலைப்பு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இது குறித்த விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை கிருஷ்ணாநகர் காருண்யா தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் போளூர் சாலையில் மருந்துக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி கவிதா (41). பிரபுவும், அவரது மனைவி கவிதாவும் சேர்ந்து மருந்துக்கடையில் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் திருவண்ணாமலை ஈசானியலிங்கம் கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் மருந்துக்கடையுடன் பெட்டிக்கடையும் நடத்தி வந்துள்ளனர். அங்கு டாக்டர்கள் போல் மருத்துவம் பார்த்ததும் பெட்டிக்கடையிலேயே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை அருகே உள்ள கடலாடியை சேர்ந்த பெண் கர்ப்பிணியான நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் திடீரென அவர் சிகிச்சை பெறுவதை நிறுத்திவிட்டார். சுகாதார துறையினர் விசாரித்தபோது அவர் கருகலைப்பு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் போலி டாக்டர்களான பிரபு-கவிதா தம்பதியிடம் கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பிரபுவின் மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது பிரபு பி.ஏ. மட்டுமே படித்து உள்ளதும், கவிதா 10-ம் வகுப்பு வரை படித்ததும் அவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் போலி டாக்டர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் வைத்து கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து கணவன், மனைவியான பிரபு மற்றும் கவிதாவை பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்