கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Update: 2019-05-28 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 2 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கான சுமார் 1½ லட்சம் பாட புத்தகங்கள் தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

இதுபோல், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பும் பணியில் கல்வி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்