நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.;
நெல்லை,
நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இசைப்பள்ளி
நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இசைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவ-மாணவிகளுக்கு வயது வரம்பு 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பயில வேண்டும். முதல் ஆண்டுக்கு ரூ.152-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.120-ம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
2019-2020-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பஸ் பாஸ், ரெயில் கட்டண சலுகை வசதி, தங்கும் விடுதி வசதி, மாதம் தோறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.400 மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச செருப்பு ஆகிவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
3 ஆண்டு பயிற்சி
இந்த அரசு இசைப்பள்ளியில் 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளில் மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. அனைத்து மாணவ-மாணவிகளும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையினைக் கற்று இசை ஆசிரியர்களாகவும், கலை வல்லுனர்களாகவும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.