வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் கடும் வறட்சி டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம்
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மான்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மான்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சரணாலயம்
இந்தியாவின் தென்கோடி பகுதியில் வெளிமான்களின் வாழ்விடமாக திகழ்வது வல்லநாடு வெளிமான் சரணாலயம். தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டின் ஓரத்தில் வல்லநாட்டில் அமைந்து உள்ள மலைப்பகுதியே இந்த சரணாலயம். தேசிய அளவில் வெளிமான்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. இதனால் வெளிமான்கள் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி அட்டவணை 1-ல் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அரிய வெளிமான்களின் வசிப்பிடமாக வல்லநாடு வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. 1641.21 எக்டர் பரப்பில் அமைந்து உள்ள இந்த காப்புக்காட்டில் விறுவெட்டி, வெடதாளை, காக்காஒடை, குடைவேலம், உசில், இலந்தை வகைகள் மற்றும் வேம்பு, விராலி, கிலக்கை, கருஇண்டு, கள்ளி, சின்னி, கருந்துளசி ஆகிய தாவரங்கள் உள்ளன.
வெளிமான், எறும்பு திண்ணி, உடும்பு, காட்டுப்பூனை, கீரி, முயல், மலைப்பாம்பு, விரியன்பாம்புகள், சாரைப்பாம்பு, மயில், கொக்கு, நாரை, கவுதாரி, அண்டங்காக்கை, சிறிய கரும்பருந்து, பாம்பு தின்னி பருந்து, காலூ உள்ளான், ஆள்காட்டி குருவி, சிறுபக்கி, வானம்பாடி, கொம்பன் ஆந்தை உள்பட நூற்றுக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. தற்போது இந்த சரணாலயத்தில் 250 வெளிமான்களும், 50 புள்ளி மான்களும், 30 மிளாவும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
கடும் வறட்சி
தற்போது கடும் வெயில் காரணமாக வல்லநாடு சரணாலயத்தில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மான்கள் உணவுக்காக நீண்ட தூரம் சென்று மேய்ந்து வருகின்றன. மேலும் மான்களின் உணவு தேவைக்காக 100 ஏக்கர் பரப்பில் புல் வளர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று தண்ணீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது. சரணாலயத்தில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக 15 பெரிய தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 3 தொட்டிகளில் வாரம்தோறும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
டேங்கர் லாரியில் தண்ணீர்
இது தவிர 12 தொட்டிகளுக்கு, சரணாலயம் அருகே உள்ள பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை மலை மீது கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர். இதனால் லாரி தண்ணீர் மூலம் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிர் பிழைத்து வருகின்றன. மேலும் வருணபகவான் கைகொடுத்து சரணாலயத்தை குளிர்விக்க வேண்டும் என்று வனத்துறையினர் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.