மீன்பிடி படகு ஓட்டுனர்களுக்கு என்ஜின் பராமரிப்பு பயிற்சி
தூத்துக்குடியில் மீன்பிடி படகு ஓட்டுனர்களுக்கு என்ஜின் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மீன்பிடி படகு ஓட்டுனர்களுக்கு என்ஜின் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
என்ஜின் பராமரிப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள தொழில் காப்பகம் மற்றும் கடல்சார் பயிற்சி மையம், மீன்பிடி தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வள பொறியியல் துறை ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் மீன்பிடி படகு ஓட்டுனர்களுக்கு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த பயிற்சி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மையத்தில் நடந்தது. இதில் 25 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியில் கடல்சார் என்ஜின் பராமரிப்பு, மாலுமிகளுக்கான சாதனங்களை கையாளுதல், உயிர்காப்புச் சாதனங்களைக் கையாளுதல், கடல்சார் மின்னணுச் சாதனங்களைக்் கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழா
பயிற்சி நிறைவு விழாவுக்கு மீன்வளக்கல்லூரி முதல்வர் வேலாயுதம் தலைமை தாங்கினார். மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் கடல்சார் பயிற்சி இயக்குனரக இயக்குனர் கோ.சுகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அண்டோ வயோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வள தொழில் காப்பகம் மற்றும் கடல்சார் பயிற்சி மைய பேராசிரியர் நீதிசெல்வன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வணிக கடல் துறை துணை இயக்குனர் மற்றும் சர்வேயர் (பொறுப்பு) கோபிகிருஷ்ணா கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சிவசுடலைமணி நன்றி கூறினார். உதவிப் பேராசியரியர் ரவிக்குமார்் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.