ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மு.க. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
கோவில்பட்டி,
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மு.க. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பொருட்காட்சி
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவ வளாகத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி அரசு பொருட்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், திட்ட அலுவலர் தனபதி, வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், நகர சபை ஆணையாளர் அச்சையா, கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, நகர செயலாளர் விஜயபாண்டியன், செண்பகமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் ஏமாற்றம்
அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறியதாவது;-
இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பா.ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தவறான பிரசாரம் காரணமாக மக்கள் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ளனர். தற்போது மக்கள் வருத்தப்படுகிறார்கள். மே 23-ந்தேதிக்கு பின்னர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என மு.க.ஸ்டாலின் சொல்லி வந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
தினகரனுக்கு பதில்
வெற்றி தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்றுத் தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சாதிப்பது நாங்கள் தான் என்று கூறினார். தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது தொடர்பாக கேட்டபோது, இது நல்ல ஜோக், என அமைச்சர் தெரிவித்தார்.