சிக்னல் கோளாறு காரணமாக, பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் பழனியில் 2 மணி நேரம் நிறுத்தம் - பயணிகள் அவதி
பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் சிக்னல் கோளாறு காரணமாக பழனி ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.;
பழனி,
பழனியில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்னை, கோவை, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 8 ரெயில்கள் வந்து செல்கின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் அனைத்து ரெயில் களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தநிலையில் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் வழக்கமாக காலை 7.40 மணிக்கு பழனி ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும். பின்னர் 2 நிமிடம் நின்று புறப்பட்டு செல்லும். இதற்கிடையில் நேற்று இந்த ரெயில் 20 நிமிடம் தாமதமாக 8 மணிக்கு வந்தது. பின்னர் சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் பழனி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
நீண்ட நேரமாகியும் சிக்னல் கிடைக்காததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரியிடம், பயணிகள் முறையிட்டனர். இதையடுத்து பயணிகளின் நலன் கருதி ரெயில் நிலைய அதிகாரி முத்துச்சாமியின் சுய பொறுப்பில் ரெயிலை இயக்க என்ஜின் டிரைவர் சம்மதித்தார். இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
தற்போது பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எவ்வித குளறுபடியும் இன்றி மதுரை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நிலைய அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது.