ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி பெண்கள் உள்பட 8 பேர் காயம்
மதுரை ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலியானார், பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
மதுரை,
மதுரை வரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். நேற்று இவர் தனது ஷேர் ஆட்டோவில் அந்த பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 9 பேரை அழைத்து கொண்டு மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோமதிபுரம் அருகே வந்தபோது சாலை நடுவே திடீரென மாடு புகுந்ததால், அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆட்டோவை திருப்பினார். இதில் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வரிச்சூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குருநாதன் உள்ளிட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.