நம்பியூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு 4 பேர் படுகாயம்

நம்பியூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-28 23:00 GMT

நம்பியூர்,

நம்பியூர் காந்திபுரம் தெற்கு 4–வது வீதியை சேர்ந்தவர் தங்கவேல். அவருடைய மகன் சசிகுமார் (வயது 18). இவர் பிளஸ்–2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் நங்கையர் (19). நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசு (17). சசிகுமார், நங்கையர், அன்பரசு 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சென்றுவிட்டு நம்பியூருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சசிகுமார் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் உட்கார்ந்திருந்தனர். நாச்சிபாளையம் என்ற இடத்தில் 8 மணிக்கு வந்தபோது எதிரே நம்பியூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.

எதிர்பாராவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 மோட்டார்சைக்கிளில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சசிகுமார், தேவராஜ், நங்கையர் ஆகிய 3 பேரும் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டனர்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் நங்கையர், சசிகுமார் ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்