விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் - சங்கத்தினர் கோரிக்கை
விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு ஜனநாயக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமையில் கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் சென்றனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 2016- 17 ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உளுந்து, மணிலா மற்றும் நெற்பயிருக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக பெற்றுத்தரவேண்டும். கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் வறட்சி நிலவி வருவதால் தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பலமுறை தங்களிடம் மனுவாகவும், நேரடியாகவும் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்ற சப்-கலெக்டர் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.