கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் நகை பறிப்பு ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.;
கோவை,
கோவை ராமநாதபுரம் 6-வது வீதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி ரஞ்சிதம்(வயது55). இவர் தனது மகனுடன் உக்கடம் லாரிபேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்தார். அங்கு மீன் வாங்கி விட்டு, ராமநாதபுரம் செல்ல பஸ் ஏறுவதற்காக மார்க்கெட் பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மார்க்கெட்டில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், வாலிபர் ஒருவர் திடீரென்று ரஞ்சிதம் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதம் கூச்சல் போட்டார். உடனே அவருடைய மகன் உள்பட சிலர் நகை பறித்த ஆசாமியை பிடிக்க ஓடினார்கள். ஆனால் வாகனங்களுக்கு பின்னால் மறைந்து அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கோவை பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் நகை பறிக்கும் வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து நகைபறிப்பு ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.