குன்னூர்-ரன்னிமேடு இடையே, சிறப்பு மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குன்னூர்-ரன்னிமேடு இடையே சிறப்பு மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர்.

Update: 2019-05-27 22:30 GMT
குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர்.

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ள ரன்னிமேடு ரெயில் நிலையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இங்குள்ள ஆறுகள் சங்கமிக்கும் பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இதற்கிடையே தற்போது கோடை சீசனையொட்டி குன்னூரில் இருந்து ரன்னிமேடுக்கு சிறப்பு மலைரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து குன்னூர்-ரன்னிமேடு இடையே 5 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்தது.

அதன்படி நேற்று முதல் குன்னூரில் இருந்து 3 பெட்டிகளுடன் நீராவி என்ஜின் மூலம் ரன்னிமேடுக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டது. இதில் 64 பேர் பயணம் செய்தனர். காலை 11.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலைரெயில் மதியம் 12 மணிக்கு ரன்னிமேடு ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு பயணிகளுக்கு இனிப்பு மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.

சிறப்பு மலைரெயிலில் ஆர்வமுடன் பயணித்த சுற்றுலா பயணிகள் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதி, ஆறுகள் சங்கமிக்கும் பகுதி, தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தனர்.

மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தவிர ரெயில் நிலையத்துக்கு மேற்புறம் உள்ள காட்டேரி பூங்காவை தூரத்தில் இருந்து ரசித்தனர். பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட சிறப்பு மலைரெயில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரை அடைந்தது.

இந்த சிறப்பு மலைரெயில் வருகிற 31-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்