திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-05-27 23:31 GMT
திருப்பூர்,

திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மனைவி அருக்காணி (வயது 71). தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 13-2-2018 அன்று வீட்டில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் பின்புறம் வழியாக புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அருக்காணி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டார்.

மேலும், அருக்காணியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோக்களில் பணம் இருக்கிறதா? என சோதனை செய்து கொண்டிருந்தார். இதற்கிடையே அருக்காணி கை, கால் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

இதனால் பயந்து போன அந்த ஆசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் நகையை பறித்து சென்றவரின் உருவம் பதிவாகியிருந்தது.

இதனைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் வீடுபுகுந்து நகையை பறித்து சென்றது, கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த நந்தகுமார் (27) என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதன் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு நந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந் நிலையில் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

அப்போது வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் நந்தகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகியிருந்தார்.

மேலும் செய்திகள்