சுற்றுலா வாகன உரிமையாளர் தற்கொலைக்கு காரணமான, தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை - கலெக்டரிடம், பெற்றோர் புகார்
கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ லட்சம் மோசடி செய்ததால் சுற்றுலா வாகன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய பெற்றோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
தேனி,
ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 54). அவர், தனது மனைவி கற்பகவள்ளியுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் தம்பதியினர் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எங்கள் மகன் தர்மராஜ் (28), சென்னையில் சுற்றுலா வாகனங்கள் வைத்து இயக்கி வந்தார். எனது மகனுக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். மேலும் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதை நம்பிய எனது மகன் ரூ.1¾ லட்சத்தை வங்கி மூலம் அவர்களுக்கு செலுத்தியுள்ளார். ஆனால், சொன்னபடி கடன் வாங்கிக் கொடுக்காமல் அந்த நிதி நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த எனது மகன், கடந்த மாதம் 12-ந்தேதி சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.
எனது மகனின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட எனது மகனின் இறப்பு கடைசி இறப்பாக இருக்கட்டும்.
இனிமேல் இந்த நிறுவனத்தால் யாரும் பாதிக்கப்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.