ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வேட்டைக்காரன்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி வேட்டைக்காரன்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2019-05-27 23:04 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் தருமத்துப்பட்டியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலப்பரப்பில் இந்த குளம் உள்ளது. இந்த குளத்தின் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த குளத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என யோகானந்தசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து குளத்தை மீட்குமாறு திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் லட்சுமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, ஊராட்சி செயலர் இன்னாசி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஐகோர்ட்டு உத்தரவுப்படியே ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்