திண்டுக்கல்லில், ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த - 2½ டன் மாம்பழங்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 2½ டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், செந்துறை, வடமதுரை, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாமரங்கள் அதிகமாக உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதற்காக, திண்டுக்கல்லில் உள்ள பழக்குடோன்களுக்கு மாங்காய்களாக கொண்டு வரப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், திண்டுக்கல்லில் உள்ள பழக்குடோன்களில் ரசாயன கற்கள் மற்றும் பவுடர் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரண்யா, சந்திரமோகன், கண்ணன் ஆகியோர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகேயுள்ள பழக்குடோன்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, ஸ்பென்சனர் காம்பவுண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பழக்குடோனில் ரசாயன பவுடர் மூலம் 2½ டன் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்புதுறையினர் அந்த பழங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள், திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டு அழிக்கப்பட்டன. ரசாயன கற்கள், பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால், வயிற்றுபோக்கு, வாந்தி, தலைச்சுற்று, குடல் தொடர்பான நோய்கள், நரம்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்ணக்கூடாது என்றும், மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவது தெரியவந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.