பெங்களூருவில் கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உடல் நசுங்கி சாவு
பெங்களூருவில் கார் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். தலைமறைவான ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வந்தவர் திபாங்கர் (வயது 46). இவரது மனைவி ஸ்வாகதா சவுத்ரி(42). இவர்களது மகன் துருவா டே(16). திபாங்கரின் சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஆகும். அவர், கடந்த பல ஆண்டுகளாக ஆர்.டி.நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ஸ்வாகதாவும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தார். அந்த பள்ளியில் தான் அவருடைய மகன் துருவாவும் படித்து வந்தான்.
ஸ்வாகதாவின் சகோதரி சுஜயா(45) சென்னையில் வசித்து வந்தார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான சுஜயா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுஜயாவுடன், அவரது தாய் ஜெயந்தி(65) வசித்தார். அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் தனது தாய்க்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என்று சகோதரி சுஜயாவிடம் ஸ்வாகதா கூறி இருந்தார்.
இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயந்தியும், சுஜயாவும் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜெயந்தி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் திபாங்கர் தனது மனைவி, மகனுடன் காரில் வெளியே சென்றிருந்தார். அவர்களுடன் ஜெயந்தி, சுஜயாவும் சென்றிருந்தார்கள். பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நள்ளிரவில் சாப்பிட்ட அவர்கள் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் எலகங்கா அருகே கோகிலு கிராஸ் பகுதியில் திபாங்கரின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.
இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு வந்தது. மேலும் அந்த ரோட்டில் சென்ற திபாங்கரின் கார் மீது ஆம்புலன்ஸ் மோதியது.
ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனால் காரில் இருந்த திபாங்கர், அவரது மனைவி, மகன், மாமியார், மைத்துனி உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். விபத்து நடந்ததும் டிரைவர், ஆம்புலன்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதில் நோயாளிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி அறிந்ததும் எலகங்கா போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் 5 ேபரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக எலகங்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆம்புலன்சை டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.