தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி கோதண்டராமர் சிலை பெங்களூரு வந்தது; பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். 7 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) ஈஜிபுராவை அந்த சிலை சென்றடைகிறது.

Update: 2019-05-27 23:15 GMT
பெங்களூரு, 

பெங்களூரு ஈஜிபுராவில் கோதண்டராமசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர் சிலையை நிறுவ கோதண்டராமசாமி கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் பிரமாண்ட கோதண்டராமர் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பின்னர் 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலையானது ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ரோடு, பாலம் சேதமடைவது, மாற்றுப்பாதை அமைப்பது, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பன போன்ற பல்வேறு பிரச்சினைகளை கடந்து கோதண்டராமர் சிலை கடந்த 25-ந் தேதி கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியை அடைந்தது.

கோதண்டராமர் சிலையை சுமந்து செல்லும் லாரியானது நேற்று மடிவாளாவை வந்தடைந்தது. போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அங்கிருந்து ஈஜிபுராவை நோக்கி பகலில் சிலையை கொண்டு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் இரவில் சிலையை கொண்டு செல்லும் வகையில் மடிவாளா போலீஸ் நிலையம் அருகே கோதண்டராமர் சிலையை சுமந்து செல்லும் ராட்சத லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கு குவிந்த பொதுமக்கள் கோதண்டராமர் சிலைக்கு மாலைகள் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். இந்த சிலையானது இன்று (செவ்வாய்க்கிழமை) ஈஜிபுராவை சென்றடைய உள்ளது.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் சதானந்தா கூறுகையில், ‘சிலையை பெங்களூரு கொண்டு வருவதற்கு ஏராளமான தடைகள் எழுந்தன. இந்த தடைகளை மீறி சிலையானது பெங்களூரு கொண்டு வரப்பட்டு இருப்பது மகிழ்ச்சியானது. ஈஜிபுராவை சென்றடைந்தவுடன் சிலைக்கு முழுஉருவம் கொடுக்கும் பணி தொடங்கும். அதன்பிறகு சிலையானது குறித்த இடத்தில் நிறுவப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்