ஜனதாதளம்(எஸ்) கட்சியை மண்டியா மக்கள் நிராகரித்துவிட்டனர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. செலுவராயசாமி பேட்டி
ஜனதாதளம்(எஸ்) கட்சியை மண்டியா மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. செலுவராயசாமி கூறினார்.;
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. செலுவராயசாமி மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டியா மக்கள் அறிவாளிகள். எந்த சூழ்நிலையிலும் வதந்திகளை மக்கள் நம்ப மாட்டார்கள். அன்பு செலுத்துவார்கள். அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் அவர்களுக்கு தெரியும். குமாரசாமியை முதல்-மந்திரியாக அப்போது முடிவு செய்தனர்.
அதனால் காங்கிரசை நிராகரித்து, ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்தனர். இப்போது அந்த கட்சியையும் மண்டியா மக்கள் நிராகரித்துவிட்டனர். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பணியாற்றி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
மண்டியாவில் தோல்வி அடைந்தவர்களிடம் நாங்கள் பேசுவது இல்லை என்று மந்திரி சி.எஸ்.புட்டராஜு கூறினார். இப்போது மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். சி.எஸ்.புட்டராஜு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கூற மாட்டோம்.
சுமலதா எம்.பி.யாகி 4 நாட்கள் தான் ஆகிறது. கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் கூறுகிறார்கள். மண்டியாவில் அக்கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், 2 மந்திரிகள் உள்ளனர்.
இந்த அரசு நடத்துபவர்களும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் தான். அவர்கள் தங்களின் பணியை சரியாக செய்ய வேண்டும். மண்டியா மக்களுக்கு சேவையாற்ற சுமலதா திறமையான பெண்மணி என்பது அவரது நடவடிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது.
இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.