கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை மந்திரி எம்.பி.பட்டீல் சொல்கிறார்

கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

Update: 2019-05-27 22:45 GMT
பெங்களூரு, 

கர்நாடக போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. எங்களின் தோல்விக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். கடைசி நேரத்தில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதல் பா.ஜனதாவின் வெற்றிக்கு உதவியது. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இப்போது நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தோல்வியால் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எஸ்.எம்.கிருஷ்ணா எங்கள் கட்சியில் இருந்தவர். அரசியலை தாண்டி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

எனக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா போன் செய்து பேசினார். உடனே அவர் காங்கிரசுக்கு வருகிறார் என்று சொல்ல முடியுமா?. எங்கள் கட்சியின் மாநில தலைவராக தினேஷ் குண்டுராவ் உள்ளார். அந்த பதவியில் அவரே நீடிப்பார்.

கட்சியின் மாநில தலைவர் பதவி எனக்கு வழங்கப்படும் என்ற வதந்திகளுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். இதற்கு முன்பு கட்சியின் மாநில தலைவர் பதவி எனக்கு கிடைத்தது. ஆனால் நான் அதை நிராகரித்தேன். இப்ேபாது தலைவர் பதவி காலி இல்லை.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்