காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படும் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு இல்லை சித்தராமையா பேட்டி
கர்நாடக மந்திரி சபையில் காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படும் என்றும், இப்போதைக்கு மந்திரி சபை விஸ்தரிப்பு இல்லை என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
மைசூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மீதும், கட்சித் தலைவர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளது.
இதனால் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார். அத்துடன் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கர்நாடக மந்திரி சபை விஸ்தரிப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு தலைவருமான சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறிய தாவது:-
கூட்டணி அரசின் மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த சிவள்ளி மரணமடைந்தார். இதனால் காங்கிரசுக்கு ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. அதுபோல் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 2 மந்திரி பதவி இடங்கள் காலியாக உள்ளன. இந்த 3 மந்திரி பதவி இடங்கள் மட்டுமே நிரப்ப வேண்டியதுள்ளது. அந்த இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு இல்லை. நாங்களும் மந்திரி சபையை மாற்றி அமைக்க விரும்பவில்லை.
ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. எக்காரணம் கொண்டும் காங்கிரசை விட்டு விலகமாட்டார். எடியூரப்பா கடந்த ஒரு ஆண்டாகவே கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். அதுபோல் தான் தற்போதும் அவர் ஜூன் 1-ந்தேதி கூட்டணி அரசு கவிழும் என கூறுகிறார். இந்த கூட்டணி ஆட்சியை அவரால் கவிழ்க்க முடியாது. கூட்டணி ஆட்சி கவிழவில்லை என்றால் எடியூரப்பா அவரது பதவியை ராஜினாமா செய்வாரா? என சவால் விடுகிறேன்.
மைசூரு-குடகு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த தொகுதியில் தேர்தல் நேரத்தில் செயல்பாடுகள் எப்படி இருந்ததோ அதை தேர்தல் முடிவு எதிரொலித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.