திருவேங்கடம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது; 89 பவுன் மீட்பு
திருவேங்கடம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 89 பவுன் தங்கமும், ரூ.80 ஆயிரமும் மீட்கப்பட்டது.
திருவேங்கடம்,
நெல்லை மாவட்டம் திருவேங்கடம்-சங்கரன்கோவில் ரோட்டில் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த ரத்தினம் மகன் கணேசன் (வயது 36), சிவகாசியை அடுத்துள்ள மாறநேரி கீழத்தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சின்ன கருப்பசாமி என்பதும், திருவேங்கடம் பகுதியில் பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
2 பேரும் சேர்ந்து திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமி என்பவருடைய வீட்டில் இருந்து 6 பவுன் தங்க நகையையும், புதுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த தனலட்சுமி வீட்டில் 45 பவுன், அழகாபுரி வடக்கு காலனியை சேர்ந்த முருகன் வீட்டில் 14 பவுன், உமையத்தலைவன்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி வீட்டில் 24 பவுன், திருவேங்கடம்-கழுகுமலை ரோட்டில் ராஜதுரை என்பவருடைய பலசரக்கு கடையில் ரூ.80 ஆயிரத்தையும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரகலா வழக்குப்பதிவு செய்து கணேசன், சின்ன கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து உருக்கி வைத்து இருந்த 89 பவுன் தங்கத்தையும், ரூ.80 ஆயிரத்தையும் போலீசார் மீட்டனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை-பணத்தை கொள்ளையடித்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.