நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.;
சங்கரன்கோவில்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யப்பன் கோவில் காலனியை சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலன் (59). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலையில் நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள கோவிலுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
மோட்டார் சைக்கிளை சேர்மக்கனி ஓட்டினார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் வரும்போது மோட்டார் சைக்கிளுடன் அருகில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சேர்மக்கனி பரிதாபமாக இறந்தார். ஜெயவேலன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜெயவேலனை சிகிச்சைக்காகவும், சேர்மக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சேர்மக்கனிக்கு மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா வாணியர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற அய்யாகுட்டி (79). ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் நேற்று முன்தினம் அம்பலவாணபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு, சிவந்திபுரத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் சுடலைமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சுடலைமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.