5 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Update: 2019-05-27 22:45 GMT
தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். தற்போது தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பது முக்கியமானது ஆகும். பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நமக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். அடுத்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி வரை எந்தவித பிரச்சினையும் இன்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கு போதுமான அளவு தண்ணீர் மணிமுத்தாறு அணையில் உள்ளது.

இந்த மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. 300 கனஅடி தண்ணீர் வந்தால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் சில பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்ளலாம். தற்போது 300 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் வினியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை உள்ளது. அந்த கிராமங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு போதுமான அளவுக்கு நிதி ஆதாரம் உள்ளது. தேவைப்பட்டால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினமும் 25 லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மேலும் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தற்போது 7 எம்.ஜி.டி. தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் 90 சதவீதம் தொழிற்சாலைகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் உபயோகத்துக்காக வழங்கப்படுகிறது.

திருச்செந்தூர் அருகே கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு மாதங்களுக்குள் இந்த பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் கிடையாது.பள்ளிக்கூட வளாகங்கள் சுத்தம் செய்யும் பணி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற அனைத்தும் நடந்து வருகிறது. பள்ளிக்கூடம் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்