ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் சிகிச்சை தொகையை 12 வாரத்தில் வழங்க வேண்டும் தூத்துக்குடி கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த முத்துமாலை, மதுரை ஐகோர்ட்டில் மனு.

Update: 2019-05-27 21:30 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த முத்துமாலை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஓய்வு பெற்ற அரசு ஊழியரான நான், அரசின் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மாதந்தோறும் ரூ.150 சந்தா செலுத்தி வருகிறேன். இந்தநிலையில் திடீரென எனக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றேன். இதற்காக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தினேன். எனவே, நான் செலுத்திய கட்டணத்தை இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் திரும்ப செலுத்துமாறு விண்ணப்பித்தேன். அரசு இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நான் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியின் பெயர் இல்லை எனக்கூறி, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே எனது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, மருத்துவ சிகிச்சைக்காக நான் செலவு செய்த தொகையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இது போல பல்வேறு வழக்குகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்கள் சிகிச்சை பெற்றதற்கான தொகையை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் இந்த வழக்கிலும் மனுதாரர் பெற்ற சிகிச்சைக்கான தொகையை வழங்க கலெக்டர் மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, மனுதாரர் செலவு செய்த ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை 12 வாரத்திற்குள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்