கடந்த 2 ஆண்டுகளில் மதுரையில் 26½ கிலோ தங்கம் கொள்ளை; மாநகர குற்ற ஆவணக்காப்பகம் தகவல்

மதுரை மாநகரில் கடந்த 2 ஆண்டுகளில் 26½ கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-05-27 22:15 GMT

மதுரை,

மதுரை நகர் பகுதியில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் அதிரடிப்படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகரில் எத்தனை வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் எவ்வளவு நகைகளை இழந்துள்ளனர் என மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு மதுரை மாநகர குற்ற ஆவணக்காப்பகம் அளித்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:–

2017–ம் ஆண்டு மதுரை மாநகரில் 159 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 11 ஆயிரத்து 679 கிராம் நகைகள் கொள்ளை போயிருக்கிறது. 2018–ம் ஆண்டு 185 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது என்றும், இதன் மூலம் 14 ஆயிரத்து 874 கிராம் தங்கம் கொள்ளையடிக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 344 வீடுகளில் 26 ஆயிரத்து 553 கிராம் (26½ கிலோ) தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 920 கிராம் தங்கம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வழக்குகள் அனைத்தும் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்