தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்ததால் பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலத்தில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்ததால் பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Update: 2019-05-27 22:15 GMT
சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்று கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவேன் என்று பொதுமக்கள் மத்தியில் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறினார்.

இதைத்தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி சேலம் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கும், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் தொகுதியில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுப்பேன். எனக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தபின், சேலம் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்த காரணத்திற்காக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வினர் கூறியதன் அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகவும் மலிவான அரசியல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சேலம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால், கட்சியின் தலைமை யிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு எஸ்.ஆர். பார்த்திபன் கூறினார்.

நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் கார்த்திகேயன், ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், கன்னங்குறிச்சி பேரூராட்சி செயலாளர் தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் லதா சேகர் மற்றும் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்