விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு மாணிக்கம்தாகூர் கோரிக்கை

விருதுநகரில் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-05-27 19:13 GMT
விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகர் மக்களின் குடிநீர் தேவைக்கான நீர் ஆதாரங்கள் வறண்டுவிட்டதும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 60 சதவீத குடிநீரே தினசரி கிடைத்து வரும் நிலையில் 12 நாட்களுக்கு ஒரு முறையே நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக நடைபெற வில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நகராட்சி நிர்வாகத்திடம் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லை.


நகரில் குடிநீர் வினியோக திட்டத்தை மேம்படுத்த நகராட்சி நூற்றாண்டு நிதியில் இருந்து 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதில் 2 தொட்டிகள் கட்டுமான பணிகள் முழுமையாக முடியாமல் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் திட்டத்தினை நிர்வாக பிரச்சினையால் தமிழக அரசு ரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சியிடம் நிதி இல்லை. மேலும் தமிழக அரசிடம் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு இன்னும் ரூ.2½ கோடி நிதி வரவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.


எனவே தமிழக அரசு விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோக மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகரில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் வினியோக திட்ட பகிர்மான குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால் குடிநீர் வினியோக திட்டத்தை புனரமைக்க தனியாக ஒரு திட்டம் செயல்படுத்த வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்