கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்றால் குற்ற வழக்குப்பதிவு கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை
கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி,் வாழைப்பழம் மற்றும் சப்போட்டா ஆகிய இதர பழவகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிபொருட்களை தெளித்தோ பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம்.
இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதை, அஜீரண கோளாறு, கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இவை இருக்கின்றன.
கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வில் கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிபொருட்களை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவுறுத்தியதற்கு பிறகும், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.
எனவே பொது மக்களின் நலன்கருதி நாமக்கல் காய்கறி, பழ அங்காடி வணிகர்கள் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உணவு பாதுகாப்பு சட்டத்தில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வோர் அனைவரும் இந்த சட்டத்தினை முழுமையாக கடைபிடித்து தங்களது உணவு வணிகத்தினை பதிவு செய்து அல்லது உரிமம் பெற்று நுகர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான தரமான காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.