நாமக்கல் அருகே 3 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் வழங்கவில்லை
நாமக்கல் அருகே உள்ள சிலோன் காலனி, மேற்கு தோட்டம் பகுதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலோன் காலனி, மேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலோன் காலனி, மேற்கு தோட்டம் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் அவர்கள் எங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணம் செலுத்தாததால் குடிநீர் வழங்கப்படாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் தங்களிடமும் விண்ணப்பம் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை.
நாங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தில் முறையிட்டோம். அவர்கள் உங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் உண்டு என்று கூறினர். ஆனால் இதுவரை குடிநீர் வழங்கவில்லை. எனவே தாங்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.