குழந்தைகள் விற்பனை வழக்கு: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை நர்சு அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொல்லிமலை பகுதியை சேர்ந்த ஏழை பெற்றோரின் குழந்தைகளை வாங்கி அவர்கள் விற்பனை செய்ததும், குழந்தைகள் விற்பனை தொழிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டதும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் சில குழந்தைகளை சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார செவிலியர் உதவியாளராக (நர்சு) பணியாற்றும் சாந்தி மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் சில இடங்களில் இருந்து குழந்தைகளை புரோக்கர்கள் பெற்று சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சேலத்தில் கைதான செவிலியர் உதவியாளர் சாந்தி கூறிய தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலரிடம் ரகசியமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, அங்கு பணியாற்றி வரும் டாக்டர்கள், அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தினர்.
அதாவது, தினமும் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்தும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும், சில முக்கிய தகவல்களின் அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்திலும் குழந்தைகள் விற்பனை நடந்திருப்பதாக தகவல் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.