மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு: வீடு அபகரிக்கப்பட்டதால் கட்டிப்பிடித்தபடி கதறிய பெண்கள்

வீடு அபகரிக்கப்பட்டதை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வுநாள் கூடடத்திறகு வந்த 2 பெண்கள் கட்டிப்பிடித்தபடி கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-27 22:45 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து கல்வி உதவித் தொகை, சாதிச் சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வருகின்றனர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை சுமார் 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

கடந்த மார்ச் மாதம் 10–ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுறைகள் அன்று முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து அரசு அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம், மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம் போன்றவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

திருவண்ணாமலை தென்மாதிமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தென்மாதிமங்கலம் கிராமத்தில் கடந்த 45 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விட்டது. இதனால் எங்கள் கிராமத்தில் குடிநீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயத்திற்கும், ஆடு, மாடுகளுக்கும் தண்ணீர் கிடைக்காததால் விவசாயமே பாதிக்கப்பட்டு நெல்பயிர்களும் காய்ந்து விட்டது. இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனவே பழுதான டிரான்ஸ்பார்மரை சரி செய்து தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

கலெக்டர் அலுவலக வரவேற்பு வளாகம் முன்பு திடீரென 2 பெண்கள் கட்டிப்பிடித்தபடி சத்தமாக கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அமிர்தம்மாள், அவரது மகள் விஜயா என்பது தெரியவந்தது.

அப்போது அமிர்தம்மாள் கூறுகையில், ‘‘எங்களுக்கு சொந்தமான பூர்வீக வீட்டை உறவினர் ஒருவர் அபகரித்துக் கொண்டார். இனி என்னால் வாழ இயலாது. எனவே என்னை தற்கொலை செய்து கொள்ள சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார். பின்னர் அவர்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனுஅளித்தனர்.

வெறிச்யோடிய அலுவலகம்

கலெக்டர் அலுவலகத்தில் 2 மாத இடைவெளிக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்கியதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஆண்கள் மற்றும் பெண்களை தனித்தனியே போலீசார் சோதனை நடத்தினர். அத்துடன் பொதுமக்களின் உடமைகளையும் போலீசார் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் கூட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடியே காணப்பட்டது.

மேலும் செய்திகள்