கோதாவரி –காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-05-26 23:29 GMT

ஈரோடு,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சென்னியப்பன், துணைச்செயலாளர்கள் தங்கவேல், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொ.ம.தே.க. வேட்பாளர் வெற்றி பெற உழைத்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மருத்துவ அணி செயலாளர் சதாசிவம், விவசாய அணி செயலாளர் கோபால்சாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

கொ.ம.தே.க.வை பொறுத்தவரையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறோம். முதல் முதலாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்கி இருக்கிறோம். மேலும் கொங்கு மண்டலத்தில் இருக்கிற அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதல் –அமைச்சரையும், அமைச்சர்களையும் பற்றி எவ்வளவு கொச்சையாக பேசினார் என்பதை மக்கள் அறிவார்கள். அதையெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் பொருட்படுத்தாமல் அவர்களோடு கூட்டணி வைத்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த தேர்தலில் மக்கள் அரசியல் நாகரீகத்தை கற்று கொடுத்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க. எவ்வளவு அதிகாரத்தோடு பயணித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இன்றைக்கு பல ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். அந்த கோப்புகளை எல்லாம் மத்திய அரசு வைத்துள்ளது.

தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று போராடிய விவசாயிகள் பாரத பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதை கூட இவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும் திறமை ஆனவர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள். தைரியமானவர்கள். தமிழக உரிமைக்காக உரக்க குரல் கொடுக்கக்கூடியவர்கள்.

எனவே கடந்த 5 ஆண்டுகள் நடந்த நடப்புகளை வைத்து இப்போது ஒப்பிடக்கூடாது. என்னென்ன திட்டங்களை நாங்கள் திட்டமிடுகிறோமோ அத்தனையும் மத்திய அரசிடம் இருந்து பெற்று சாதித்து காட்டுவோம்.

இப்போது உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும்போது இந்த அரசுக்கு கொஞ்சம் சங்கடமான நிலைதான் வரும். கங்கை –காவிரி திட்டம் போல் கிடப்பில் போடாமல், கோதாவரி –காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். எங்களது கட்சி தொடர்ந்து தி.மு.க.வில் அங்கம் வகிக்கும்.

இவ்வாறு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

மேலும் செய்திகள்